Monday, February 8, 2016

போதை



மதுவில்லா போதையிது,
புகையில்லா போதையிது...
இவை கொடுக்கும் போதையினும் பெரிதான போதையிது...

சிவன் கொடுத்த போதையிது,
இவன் குடித்த போதையிது,
கண் திறந்து பார்த்த போதும் பூத்திருந்த போதையிது...

சொட்டு சொட்டாய் கலந்திட்டதோ,
சொட்டுமில்லா கரைகிறதோ,
சொட்ட சொட்ட சொக்கவைக்கும் சொர்க்கம் மிஞ்சும் போதையிது...

மூச்சில் கலந்த போதையிது,
உயிர் மூச்சை எடுக்கும் போதையிது,
காலம் மூன்றும் கடந்து செல்ல கூட்டிச்செல்லும் போதையிது...

மிச்சமில்லா போதையிது,
தலை உச்சிக்கேறும் போதையிது,
உச்சம் அதை உணரத்தூண்டும் இச்சையான போதையிது...

பக்தி தந்த போதையிது,
சக்தியான போதையிது,
முக்தி ஆசை தூண்டவந்த சித்தியான போதையிது...

கலந்திடுமோ காலமெல்லாம்,
கரைந்திடுமா கர்மமெல்லாம்,
காத்திருக்க நேரமில்லை,
கலந்திடவா உன்னோடு - கரைத்திடு வா காற்றோடு
சம்போ மஹாதேவா......

 - வநி

Thursday, July 10, 2014

காதல் திருமணம்


நீ காதலியாக இருந்து மணப்பெண்ணாகும் தருணம் - 
நீ கருத்தரிப்பதற்குள் நான் தாயாவது போல் உணர்கிறேன் 

சுடிதார் சுட்டிப்பெண்ணாக பார்த்த உன்னை,
சேலையில் நாயகியாக பார்க்க கண்களினோரம் ஈரக்காட்சிகள், 

இதுவரை உணர்ந்தது காதலென்றால்,
இப்பொழுது உணர்வதென்ன? - இது இன்னும்கூட இனிக்கின்றதே! 

நீ என் மனைவி ஆவதுதான் திருமணம் என்றால் -
எனக்குள் ஏன் ஒரு குழந்தையை தத்தெடுப்பது போன்று உணர்வு?

ஒவ்வொரு ஆணும் தாய்தானோ -
மணப்பந்தலில் தன்னவள் கைப்பிடிக்கும்பொழுது.

ஏற்றுக்கொள்வதின் சுகம் இதுதானென்றால்
ஒருமுறை போதாது இந்த திருமணம் நம்வாழ்வில்.

திருநாளை எண்ணி காத்திருக்கிறேன்,
உன் பிஞ்சுப்பாதங்கள் என் வாசற்படி தாண்டி உள்விழைய!

அன்புடன்,
வநி

Tuesday, November 6, 2012

பெண்ணே நீ




ஏ முத்துத் தென்றலே,
என் முத்தக் காதலே...

வாழ்வும் நீயடி,
என் வாழ்கை நீயடி...
வாழ்ந்தோய்ந்து போகையில்,
என் ஆவி நீயடி...

தங்கம் நீயடி,
தேன் அங்கம் உனதடி,
பெண்ணே என்னடி??
என் ஊனும் நீயடி...

தண்ணீர் நீயடி,
என் செந்நீர் நீயடி...
பன்னீராய் ஆகையில்.
என் கண்ணீர் நீயடி...

சத்தம் நீயடி,
என் மொத்தம் உனதடி...
நீ சிப்பியாகையில் - அதில்
முத்து எனதடி...

உன்னால் உருகினேன்,
என்னை உருக்கி ஊற்றினாய்,
ஊற்றும்  வேளையில் - நான்
ஆவியாய் கரைகிறேன்...
ஆவியும் கலந்தது  - அது
மொத்தம் உன்னிடம்.

பார்த்துக்கொள்ளடி,
உன்னுள் நானடி...
உன்னை பார்த்துக்கொள்ளடி,
உன் பாதி நானடி!

Friday, March 9, 2012

நீ வேண்டும்



நீ வேண்டும்,
உன் பிள்ளை மொழி வேண்டும்...

சிணுங்கி சிரிக்கையில் -
சில்லென்று சிலிர்க்கும் ரோமங்களின் உணர்வு வேண்டும்...

உன் பார்வை வேண்டும்,
பார்த்த நொடியில் ஆயிரம் ஆயிரம் -
புரியா மொழி பேசும் உன் விழிகள் வேண்டும்...

கன்னம் வேண்டும்,
கன்னத்தில் இருக்கும் சிறு ரோமங்கள் -
என் மூச்சு காற்றில் ஆடிடல் வேண்டும்...

பற்கள் வேண்டும்,
பாலில் ஊறவைத்த முத்துக்களை கொண்டு -
அடுக்கிய மணியா என்கிற அழகு வேண்டும்...

கூந்தல் வேண்டும்,
கார் மேகங்கள் கரைந்து -
கரு-ஆறுகளாய் ஓடுதலில் மூழ்கிடல் வேண்டும்...

காதுகள் வேண்டும்,
என் மொழி கேட்டு -
என்னை யாரென்று கேட்கும் கேள்விக்குறி வேண்டும்...

தோள் வேண்டும்,
தோல்வியில் சாய்ந்துகொள்ள -
தோழியாய் அது வேண்டும்...

ஈருயிர் - ஓருயிராகி,
புது உயிரொன்று வேண்டும்...

பிள்ளைக் குறும்பின் தொல்லை வேண்டும்,
தொல்லையில் தொலைந்த என்னை -
தட்டி எழுப்ப  உன் கைகள் வேண்டும்...

பாதம் வேண்டும்,
பாதை மாறி போகையில் -
உன் பாதசுச்வடுகள் வழி காட்டிடல் வேண்டும்...

விண்ணும் வேண்டும் - மண்ணும் வேண்டும்,
உன் மூசுச் காற்றுடன் - உடல் சூடும் வேண்டும்,
ஆனந்தக் கண்ணீரும் வேண்டும்...

இன்னும் வேண்டும்,
எல்லாமும் நீயாகவே வேண்டும்...

நீ வேண்டும்...!


Monday, December 26, 2011

மயக்கம்



நானும் கோழைதான்,
உன் கண்களை எதிர்கொள்ள முடியாமல்
தோற்றுப்போகும்போது...